ராணுவ ஆயுதப்படைகளுக்கு மருத்துவர்கள் சேர்க்கை
ராணுவ ஆயுதப்படை பிரிவுகளில் மருத்துவர் சேர்க்கைக்கான பயிற்சி நுழைவு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 150 பேர் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்திய ராணுவத்தின் முப்படைப் பிரிவுகள் மற்றும் துணை ராணுவ படை வீரர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியே மருத்துவர்கள் குழு இருக்கும். தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் பேரிடர் பாதிப்புகளின் போது பொதுமக்களுக்கும் இவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். ‘ஆர்ம்டு போர்சஸ் மெடிக்கல் சர்வீஸ்’ எனப்படும் இந்த பிரிவுக்கான ஜூன்-2019 பயிற்சி நுழைவின் அடிப்படையில் தற்போது மருத்துவம் படித்த ஆண்-பெண் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர். மொத்தம் 150 பேர் இந்த பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். இதில் 15 இடங்கள் பெண் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டெல்லி கன்டோன்மென்ட் ராணுவ மருத்துவமனையில் இந்த நேர்காணல் நடக்க உள்ளது. ஜூலை 30 அன்று நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பணிக்கான நேர்காணலில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை முதல் முறை அல்லது இரண்டாவது முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். முதுநிலை மருத்துவம் படித்தவர்கள், முதுநிலை டிப்ளமோ மருத்துவம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் மருத்துவ கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருப்பது அவசியமாகும்.
குறிப்பிட்ட உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி. சான்றிதழுக்கு குறிப்பிட்ட மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். முதுநிலை மருத்துவம் படித்தவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். முதுநிலை டிப்ளமோ மருத்துவம் படித்தவர்கள் 31 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நேர்காணலில் பங்கேற்க செல்பவர்கள் தேவையான ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். கட்டணமாக ரூ.200 ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது செலுத்த வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 21-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.amcsscentry.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
Related Tags :
Next Story