கருங்கல் அருகே முகநூல் மூலம் காதலித்து மாணவியை கடத்திய வாலிபர் கைது


கருங்கல் அருகே முகநூல் மூலம் காதலித்து மாணவியை கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 July 2019 3:45 AM IST (Updated: 1 July 2019 8:14 PM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே முகநூல் மூலம் காதலித்து மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கருங்கல்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தோட்ட தொழிலுக்காக கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் கரடிக்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஜெயராம் (வயது 21). இவர் குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு கார் சர்வீஸ் சென்டரில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இவர், முகநூல்(பேஸ்புக்) மூலம் இளம்பெண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு அவர்களுடன் அடிக்கடி பேசி வந்தார்.

இந்தநிலையில் கருங்கல் பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவிக்கும், ஜெயராமுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதனால், சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவி தனது செல்போனில் இருந்து ஜெயராமிடம் நீண்டநேரம் பேசியது தெரியவந்தது. மேலும் ஜெயராம், மாணவியை கர்நாடக மாநிலத்துக்கு கடத்தி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து போலீசார் கர்நாடக மாநிலம் விரைந்து சென்று மாணவியை மீட்டனர். மேலும், மாணவியை கடத்தியதற்காக ஜெயராமை கருங்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ஜெயராமை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் ஜெயராம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரை இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும், மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story