ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு அருகே தனியார் நிறுவனம் கிணறு தோண்டுவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்


ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு அருகே தனியார் நிறுவனம் கிணறு தோண்டுவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 2 July 2019 4:15 AM IST (Updated: 1 July 2019 8:21 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு அருகே தனியார் நிறுவனம் கிணறு தோண்டுவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னிமலை, 

சென்னிமலை அருகே உள்ளது அய்யம்பாளையம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அய்யம்பாளையம்-வெப்பிலி ரோட்டில் கீழ்பவானி வாய்க்கால் அருகில் 3 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளது.

இந்த ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து மின் மோட்டார் மூலம் அய்யம்பாளையத்தில் உள்ள மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் தற்போது 2 ஆழ்குழாய் கிணறுகளில் மட்டும் ஓரளவு தண்ணீர் கிடைத்து வந்தது.

இந்த ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகிலேயே விவசாய நிலத்தில் இருந்த கிணறு ஒன்றை தனியாருக்கு சொந்தமான எம்.சேண்ட் மணல் (செயற்கை மணல்) தயாரிக்கும் நிறுவனம் விலைக்கு வாங்கியது.

அந்த கிணற்றில் இருந்து இரவு, பகலாக ராட்சத ஜெனரேட்டர் மூலம் மின் மோட்டாரை இயக்கி லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதுடன், சுமார் 1 கி.மீ தூரத்தில் உள்ள எம்.சேண்ட் தயாரிப்பு நிறுவனத்திற்கு குழாய் மூலமும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் குறைந்துள்ள நிலையில், எம்.சேண்ட் தயாரிக்கும் நிறுவனம் தங்களது கிணற்றை மேலும் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த கிணற்றை ஆழப்படுத்தினால் பெரும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் எனக்கூறி அய்யம்பாளையத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு அருகே தனியார் நிறுவனம் கிணறு தோண்டுவதை தடுத்து நிறுத்த கோரி மனு கொடுத்தனர்.

அந்த சமயத்தில் ஊராட்சிக்கு சொந்தமான மற்றொரு ஆழ்குழாய் கிணறு அருகிலும் விவசாயி ஒருவர் தோட்டத்தில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அய்யம்பாளையம்-வெப்பிலி ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வருவாய் துறையினர், சென்னிமலை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், "ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு உள்ள இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு வேறு யாரும் ஆழ்குழாய் கிணறு அமைப்பதோ அல்லது கிணறுகளை அதிக ஆழமாக தோண்டுவதோ கூடாது. இதனால் எங்களுக்கு பெரும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கை விட்டனர். இந்த சாலை மறியலால் அந்த வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story