விலையில்லா மடிக்கணினி கேட்டு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை


விலையில்லா மடிக்கணினி கேட்டு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 2 July 2019 4:30 AM IST (Updated: 1 July 2019 9:10 PM IST)
t-max-icont-min-icon

விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை, 

அரசு பள்ளிகளில் தற்போது படிக்கும் பிளஸ்-1 மற்றும் பிளஸ் -2 மாணவர்களுக்கு தமிழக அரசு விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படித்து முடித்துவிட்டு கல்லூரிகளில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போது எங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. எங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று அவர்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை தாலுகாவில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படித்து முடித்து தற்போது கல்லூரிகளில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவ, மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு மடிக்கணினி வழங்கக் கோரி கோஷங்கள் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் தற்போது பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளியில் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் படித்து வரும் எங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. எங்களுக்கு முன்னுரிமை அளித்து மடிக்கணினி வழங்காமல் தற்போது படிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே எங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்றனர்.

இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறி போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் கலெக்டர் அலுவலகம் முன்பு போளூர் சாலையில் அமர்ந்து மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்று போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கிருந்து கலைந்து வந்த மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் சுமார் 1½ மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது.

இதையடுத்து போலீசார் மாணவர்களிடம் கோரிக்கை குறித்து மனுவை கலெக்டரிடம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர் மாணவர்கள் கலெக்டரை நேரில் சந்தித்து மடிக்கணினி வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, உங்களுக்கு மடிக்கணினி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story