குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 July 2019 11:00 PM GMT (Updated: 1 July 2019 6:29 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை கேட்டு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நெல்லை அருகே உள்ள தென்கலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தோடு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தங்கள் ஊரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மறுக்கப்படுகிறது. மேலும் 10 நாட்களாக குடிநீர் சரிவர வரவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறோம். எங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாரணம்மாள்புரம் கிராம மக்கள், தங்கள் ஊரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

நெல்லை அருகே உள்ள கட்டுடையார்குடியிருப்பு கிராம மக்கள் தமிழர் விடுதலை களம் தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் முத்துகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கார்த்திக், சேகர், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் நாகராஜ சோழன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், எங்கள் ஊரில் 35 வருடங்களாக தேச தலைவர்கள், சமூதாய தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் உள்ளது. இந்த படங்களுக்கு அவர்களுடைய பிறந்த நாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறோம். இதை கடந்த 14-5-2019 அன்று கோவில் திருவிழாவையொட்டி புதுப்பித்தோம். இந்தநிலையில் போலீசார் அந்த மணிமண்டபத்தை அகற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர். இந்த மணிமண்டபம் அதே இடத்தில் இருக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ராதாபுரம் அருகே உள்ள செட்டிகுளம் கிராம மக்கள் விவசாய சங்க தலைவர் ஆதித்தன் நாடார், செல்வகுமார், லிங்கம், கணேசன், கண்ணன் ஆகியோர் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், செட்டிகுளம் கிராமத்தில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனவே குளத்தில் இருக்கும் மணல்மேடுகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை அருகே உள்ள சேந்திமங்கலத்தில் பள்ளிக்கூடத்தின் அருகில் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு பணிக்கான தொட்டி கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.

இட்டமொழி கிராம மக்கள் நல்லாசிரியர் ஜான்சன் சாமுவேல் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அதில், இட்டமொழியில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஊருக்கு கிழக்கே உள்ள உறைகிணறு அருகில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும். சாலை வசதி செய்து தர வேண்டும். தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லை மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் புதுமனை ராஜா கொடுத்த மனுவில், நெல்லை வ.உ.சி. மணிமண்டபத்தை சுற்றி குப்பைகள் நிறைந்து பராமரிப்பு இல்லாமல் மோசமாக கிடக்கிறது. மணிமண்டபத்தை நல்லமுறையில் பராமரிக்க வேண்டும். பொருட்காட்சிக்காக மணிமண்டப சுவர்களில் பொருத்தியுள்ள தகரம் மற்றும் கம்பிகளை அகற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லையை அடுத்த கொண்டாநகரத்தில் கிராமப்புற விவசாய தொழிலாளர்களுக்கும், பீடித்தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவில் வீடுகட்ட நடப்பு நிதியாண்டில் நிதி ஒதுக்கி தரவேண்டும் என்று கூறி அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் மனு கொடுத்தார்.

வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களுக்கு அவர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டு நிறுவனம் தான் முழுபொறுப்பு ஏற்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். போலி விசாவில் மக்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் ஏஜெண்டுகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதற்கு மத்திய-மாநில அரசுக்கு தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தங்களுக்கு அரசு வழங்கும் இலவச மடிக்கணினியை உடனே வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சகாய இனிதா தலைமையில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக்கூடாது. அங்குள்ள அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று விஜயாபதி கிராம பஞ்சாயத்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்த நிலையில் அந்த கிராமசபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டனர். ரத்து செய்த கிராமசபை கூட்டத்தை மீண்டும் நடத்தி பொதுமக்கள் கொண்டு வரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். அடையாள அட்டையை புதுப்பித்து வழங்க வேண்டும். தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கூறி பாரத காந்திஜி பொதுத்தொழிலாளர்கள் சங்க மாநில துணை தலைவர் ராமச்சந்திரன் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 9 பேருக்கு உதவி தொகை பெறுவதற்கான உத்தரவு, 10 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 51 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மனீஸ் நாரணவரே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story