நாகரசம்பட்டி அருகே விபத்து ஓய்வு பெற்ற வன அலுவலர்-மனைவி பரிதாப சாவு


நாகரசம்பட்டி அருகே விபத்து ஓய்வு பெற்ற வன அலுவலர்-மனைவி பரிதாப சாவு
x
தினத்தந்தி 2 July 2019 4:45 AM IST (Updated: 2 July 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

நாகரசம்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது தனியார் கல்லூரி வாகனம் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற வன அலுவலர், அவரது மனைவியான பள்ளி தலைமை ஆசிரியை பரிதாபமாக இறந்தனர்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சென்றாயம்பட்டியை சேர்ந்தவர் வினோபாஜி (வயது 60). வனச்சரக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அற்புதமணி (50). இவர் பாலேகுளி ஊராட்சி செலசனாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை வினோபாஜி, தனது மனைவியை பள்ளியில் கொண்டு விடுவதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் வேலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த தனியார் கல்லூரி வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்து வினோபாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி அற்புதமணி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த வினோபாஜி - அற்புதமணி தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். விபத்தில் கணவன் - மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story