திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 2 July 2019 4:15 AM IST (Updated: 2 July 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

திருவாரூர்,

தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதாலும், காவிரி நீர் சரிவர கிடைக்காததாலும் ஆறு, வாய்க்கால், குளங்கள் வறண்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளில் 4,083 குளங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சி உள்பட்ட பகுதிகளை சேர்த்தும் 4,875 குளங்கள், 30 ஏரிகள், பிரதான ஆறுகளான வெண்ணாறு, பாமணி, கோரையாறு உள்பட 20 ஆறுகள் உள்ளன. தற்போது நிலவி வரும் வறட்சியினால் அனைத்து நீர்நிலைகளும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

ஆறுகள், ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்ட நிலையில், பாசன வசதியுடைய குளங்களை தவிர மற்ற குளங்கள் தண்ணீர் இன்றி காட்சியளிக்கின்றன. இந்த ஆண்டு கோடை காலம் நிறைவு பெற்ற நிலையில் வெயிலின் தாக்கம் குறையாமல் அதிகரித்து வருகிறது. மழையும் பெய்யாமல் உள்ளதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குறுவை சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயநிலை உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம் நிலத்தடி நீரை ஆய்வு செய்ததில் கடந்த ஜனவரி மாதம் திருவாரூர் நகரில் 17.5 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் தற்போது 18.6 மீட்டராக குறைந்துள்ளது. இதேபோல் மன்னார்குடி பரவாக்கோட்டையில் 32.3 மீட்டராக இருந்தது, 42.4 மீட்டராகவும், நீடாமங்கலம் சாத்தனூரில் 31 மீட்டராக இருந்தது, 46.5 மீட்டராகவும், கொரடாச்சேரி கண்கொடுத்தவணிதம் பகுதியில் 8.1 மீட்டராக இருந்தது, 17.2 மீட்டராகவும் குறைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் பல இடங்களில் மின் மோட்டார்கள் இயக்க முடியாமல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. மேட்டூர் அணையும் கடந்த 8 ஆண்டுகளாக உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அளித்த எந்த உத்தரவையும் நடைமுறைப்படுத்தாமல் கர்நாடக அரசு இருந்து வருகிறது.

ஒரு பக்கம் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதி, மறுபக்கம் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் தமிழகமே பாலைவனமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தண்ணீர் பிரச்சினையால் சாகுபடி குறைந்து வருவதால் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வரும் நிலையில், தற்போது மீண்டும் ரியல் எஸ்டேட் தொழில் புத்துணர்வு பெற்று வருகிறது.

பருவ மழை காலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தண்ணீர் சேமிக்க வழியின்றி கடலில் கலந்து வீணாகிறது. இதற்கு முக்கிய காரணம் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டை செல்லும் பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி கிடக்கிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியாமல் போகிறது. கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. கோடை காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் காலம் கடந்து மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கும்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவசர கோலத்தில் பணிகள் அரங்கேறி வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு கலெக்டராக இருந்த நடராசன் நிலத்தடி நீர் செறிவூட்டு திட்டத்தை செயல்படுத்தினார். 430 ஊராட்சிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தி்ன் கீழ் குளத்தின் நடுவே ஆழ்குழாய் கட்டமைப்பு அமைக்கப்பட்டது. இதேபோல் அனைத்து ஆறுகளில் பூமிக்கு அடியில் தடுப்பு அணைகள், 100 மீட்டர் தூரத்திற்கு 20 மீட்டர் ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படும்போதும், மழை வெள்ள காலங்களிலும் தடுப்பு அணைகள், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் பூமிக்குள் தண்ணீர் சென்று அடைந்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் பயனற்ற நிலையில் உள்ளது. இந்த கட்டமைப்புகளை புனரமைப்பு செய்தால் நிச்சயம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். குறிப்பாக வீடுகள், கடைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டமும் முறையாக அதிகாரிகள் கண்காணிக்காததால் பெயரளவில் உள்ளது.

எனவே திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால், வடிகால்களை முறையாக தூர்வாரிட வேண்டும். குளம், குட்டை மற்றும் நீர் நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். நிலத்தடி நீர் செறிவூட்டு திட்டத்திற்கான கட்டமைப்புகளை புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாக அமைக்கப்படுவதை கண்காணித்திட வேண்டும். அப்போது தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும்.

இல்லையென்றால் ஒரு சில மாதங்களில் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயநிலை ஏற்படும். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story