மெலட்டூர் அருகே, அரிவாளை காட்டி பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு


மெலட்டூர் அருகே, அரிவாளை காட்டி பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 July 2019 3:45 AM IST (Updated: 2 July 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

மெலட்டூர் அருகே அரிவாளை காட்டி பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மெலட்டூர்,

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள நெய்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது50). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சகுந்தலா. சம்பவத்தன்று இரவு கோவிந்தராஜ், சகுந்தலா ஆகியோர் தங்களுடைய வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து சகுந்தலா கதவை திறந்து பார்த்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாளை காட்டி மிரட்டி, சகுந்தலா அணிந்து இருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சகுந்தலா மெலட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

3 பேருக்கு வலைவீச்சு

சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், திருமுருகன், திருநாவுக்கரசு, ஏட்டு சம்பத் உள்ளிட்டோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் தஞ்சை மானோஜிபட்டியை சேர்ந்த காளியப்பன் மகன் ரமேஷ் (23) என்பவருக்கு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story