சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை புதிய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பேட்டி
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று புதிய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய சங்கர் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இதனிடையே சேலம் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய செந்தில்குமார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
முன்னதாக மாநகர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அவரை போலீஸ் துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சேலம் மாநகரில் பல இடங்களில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்களில் பள்ளிக்குழந்தைகளை அதிகம் ஏற்றி செல்வதை தடுக்கவும், மது போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கவும் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story