வாரிசு சான்று கிடைக்காததால் பெண் தீக்குளிக்க முயற்சி - திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


வாரிசு சான்று கிடைக்காததால் பெண் தீக்குளிக்க முயற்சி - திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 July 2019 4:00 AM IST (Updated: 2 July 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

வாரிசு சான்று கிடைக்காததால் பெண் தீக்குளிக்க முயன்றதால், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக, ஒரு பெண் கையில் பையுடன் வந்தார். இதனால் சந்தேகம் கொண்ட போலீசார் , அவரை நோக்கி விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த அந்த பெண், பையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தீக்குளிக்க முயன்றார். அதற்குள் துரிதமாக செயல்பட்ட போலீசார், மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர்.

பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது பெயர் சாந்தி (வயது 30) எனது ஊர், ஒட்டன்சத்திரம் தாலுகா பாலப்பன்பட்டியை அடுத்த பாறைவலசு ஆகும். எனது கணவர் கிருஷ்ணகுமார் இறந்து விட்டதால், தனியாக வசித்து வருகிறேன். இந்த நிலையில் எனது கணவருக்கு வாரிசு சான்று கேட்டு, பொதுசேவை மையத்தில் கடந்த மாதம் விண்ணப்பித்தேன். இதற்கான அனைத்து ஆவணங்களையும் கொடுத்தேன்.

ஆனால், எனது கணவரின் உறவினர், அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்து சான்று கிடைக்காமல் தடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளேன். எனினும், இதுவரை வாரிசு சான்று கிடைக்கவில்லை. இதனால் மனஉளைச்சல் அடைந்து கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்தேன், என்றார்.இதைத் தொடர்ந்து அவருக்கு, போலீசார் உரிய அறிவுரைகளை கூறினர். மேலும் அதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story