மரத்தில் அரசு பஸ் மோதி விபத்து, கண்டக்டர் உள்பட 6 பேர் காயம்
பழனி அருகே மரத்தில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் கண்டக்டர் மற்றும் 5 பயணிகள் காயமடைந்தனர்.
பழனி,
கோவையில் இருந்து பழனி நோக்கி நேற்று அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை திருப்பூர் மாவட்டம் கொழுமம் அருகே உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் ஓட்டினார். உடுமலை தும்பலப்பட்டியை சேர்ந்த ருத்ரகுமார் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் சுமார் 30 பேர் பயணம் செய்தனர்.
இந்தநிலையில் அதிகாலை 3 மணி அளவில் பழனி அருகே உள்ள சண்முகநதி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. இதைக்கண்டதும் பயணிகள் கூக்குரலிட்டனர். இதற்கிடையே சாலையோர மரத்தில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய கண்டக்டர் ருத்ரகுமாரின் இடதுகாலில் முறிவு ஏற்பட்டது. மேலும் ரவிச்சந்திரன், லட்சுமி, ரமேஷ் உள்பட 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story