திண்டுக்கல் மாவட்டத்தின், 3-வது பெண் கலெக்டராக விஜயலட்சுமி பதவிஏற்பு


திண்டுக்கல் மாவட்டத்தின், 3-வது பெண் கலெக்டராக விஜயலட்சுமி பதவிஏற்பு
x
தினத்தந்தி 2 July 2019 4:15 AM IST (Updated: 2 July 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தின் 3-வது பெண் கலெக்டராக விஜயலட்சுமி நேற்று பதவி ஏற்றார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த டி.ஜி.வினய், அரியலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி, திண்டுக்கல்லுக்கு நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக விஜயலட்சுமி நேற்று பதவி ஏற்றார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இவர் திண்டுக்கல் மாவட்டத்தின் 3-வது பெண் கலெக்டர் ஆவார். இவருக்கு முன்பு வாசுகி,அமுதா ஆகியோர் திண்டுக்கல் கலெக்டராக பணி புரிந்தது குறிப்பிடத் தக்கது. விஜயலட்சுமி விலங்கியல் பட்டப் படிப்பை முடித்துள்ளார். கடந்த 1992-ம் ஆண்டு நகராட்சி கமிஷனராக அரசு பணியை தொடங்கினார். சத்தியமங்கலம், மேட்டுப் பாளையம், உடுமலைப்பேட்டை, ராஜபாளையம், கரூர் ஆகிய நகராட்சிகளில் கமிஷனராக பணியாற்றி உள்ளார்.

பின்னர் 2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். ஆனார். கோவை சப்-கலெக்டராகவும், சென்னை மாநகராட்சியின் சுகாதார துணை கமிஷனராகவும் பணியாற்றினார். மேலும் நகராட்சி நிர்வாக துறையில் திருப்பூர் மண்டல இணை இயக்குனர், ஈரோடு மற்றும் திருச்சி மாநகராட்சிகளில் கமிஷனராக பணியாற்றினார்.

இவர் கமிஷனராக பணியாற்றிய போது, ஈரோட்டுக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது கிடைத்தது. அதேபோல் திருச்சி மாநகராட்சி மத்திய அரசின் தூய்மை நகர கணக்கெடுப்பில் 3-ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி முதல் கலெக்டராக பணியாற்றி உள்ளார்.

Next Story