ஹைவேவிஸ் பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
ஹைவேவிஸ் பேரூராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் 87 பேருக்கு ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 100 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஹைவேவிஸ் பகுதி மலைவாழ் மக்கள் நலச்சங்கம் சார்பில், சங்கத்தின் செயலாளர் மாரியப்பன் தலைமையில் பொதுமக்கள் சிலர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு, கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஹைவேவிஸ் பேரூராட்சி எல்லைக்குள் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இதன் அருகில் ஆரம்ப சுகாதார நிலையம், மின்நிலையம், மருத்துவமனை, மின்வாரிய குடியிருப்பு, அரசு ஆய்வு மாளிகை, பேரூராட்சி கடைகள், பொதுமக்கள் தங்கும் விடுதி, தொடக்கப்பள்ளி மற்றும் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கடையை மூட வேண்டும் என்று பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஹைவேவிஸ் பேரூராட்சி எல்லைக்குள் டாஸ்மாக் கடை இருக்கவே கூடாது என்பது எங்களின் வேண்டுகோள். மேகமலை வன உயிரின பாதுகாப்பகமாக உள்ள பகுதியில் பட்டா நிலமாக இருந்தாலும் மதுவிற்பனை செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் தலைமையில் போடி நகரை சேர்ந்த விவசாயிகள், கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘போடியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் சிலர் கடன் வாங்கி விவசாயம் செய்தனர். கடன் தொகையை சீராக கட்டி வந்தனர். சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம், வறட்சி காரணமாக கடனை செலுத்த முடியவில்லை. இந்நிலையில், வங்கி நிர்வாகம் தனியாக ஒரு கடன் வசூல் குழுவை அமைத்து விவசாயிகளுக்கு நெருக்கடியும், மனஉளைச்சலும் கொடுக்கிறது. பொது இடங்களில் விவசாயிகளின் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்கின்றனர். இதனால், விவசாயிகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
தேனி மாவட்ட அனைத்து நாடார் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் நாடார் தலைமையில் நிர்வாகிகள் சிலர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தேனி-மதுரை நெடுஞ்சாலையில் குன்னூர் அருகில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடி செயல்படக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவு வழங்கி உள்ளது. இதனால், இது பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் வேகத்தடை அமைத்தும், கயிறு கட்டியும், தகர பேரல்களை வைத்தும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் போதும் பரிதவிக்க வேண்டிய நிலைமை உள்ளது. எனவே, அங்கு அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையை அகற்றவும், தற்காலிக தடையை அப்புறப்படுத்தவும் வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story