தி.மு.க.வில் இணைந்தது திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு - தங்க தமிழ்செல்வன் பேட்டி


தி.மு.க.வில் இணைந்தது திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு - தங்க தமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 1 July 2019 10:30 PM GMT (Updated: 1 July 2019 7:51 PM GMT)

தி.மு.க.வில் இணைந்தது திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு என தங்க தமிழ்செல்வன் கூறினார்.

கம்பம்,

கம்பத்தில் தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் ராமகிரு‌‌ஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நகரச்செயலாளர் வக்கீல் துரைநெப்போலியன் வரவேற்றார். போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அரசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர, ஒன்றிய, வார்டு செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அ.ம.மு.க. கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டு தேனி மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராமகிரு‌‌ஷ்ணனை சந்தித்து சால்வை அணிவித்தார். அப்போது கம்பம் அ.ம.மு.க. நகரச்செயலாளராக இருந்த வீரபாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைந்ததற்காக போடியில் நடைபெற உள்ள இணைப்பு விழா மற்றும் தி.மு.க.வின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போடியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் என்னுடன் பயணித்த அ.ம.மு.க தொண்டர்களை அழைத்து வந்து தி.மு.க.வில் சேர்த்து பிரமாண்டமாக விழா நடத்தப்படவுள்ளது. அ.ம.மு.க., அ.தி.மு.க. கட்சி கொள்கைகள் பிடிக்கவில்லை. வருங்காலத்தில் தி.மு.க.தான் நீண்ட நெடிய முன்னேற்றத்தை தமிழ்நாட்டுக்கு கொடுக்கும். தமிழகத்தின் உரிமைகளை காப்பதற்கு ஸ்டாலின் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையின் பேரில்தான் தி.மு.க.வில் இணைந்தேன். தி.மு.க.வில் இணைந்தது திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு. தி.மு.க.வில் நான் இணைந்ததற்கு எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் தலைவர் முதல் தொண்டர்கள் வரை என்னை பாசத்துடன் வரவேற்று உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story