பெரணமல்லூர் அருகே சரக்கு ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை போலீசார் விசாரணை


பெரணமல்லூர் அருகே சரக்கு ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 July 2019 1:43 AM IST (Updated: 2 July 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

பெரணமல்லூர் அருகே சரக்கு ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேத்துப்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகில் உள்ள களத்துமேட்டுத் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 27), சரக்கு ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு அரியப்பாடி கிராமத்தை சேர்ந்த ராம்நாத் என்பவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை, அரியப்பாடியில் விட்டு விட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் வெங்கடேசனை அவரது தந்தை பாண்டியன் பல்வேறு இடங்களில் தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அதே ஊரில் உள்ள முனுசாமி என்பவரது நிலத்தில் வெங்கடேசன் படுகாயம் அடைந்த நிலையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக பாண்டியன் அங்கு சென்று பார்த்தார். சம்பவ இடத்துக்கு செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுதாஸ், பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசாரும் விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்த வெங்கடேசன் தலையில் பாட்டிலால் அடித்தது போன்ற படுகாயங்களும், கழுத்து இறுக்கப்பட்டதற்கான தடயங்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனின் உடலை மீட்டு போலீசார் ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகள் குறித்து துப்புதுலக்க திருவண்ணாமலையில் இருந்து போலீஸ் மோப்பநாய் ஜெசி வரவழைக்கப்பட்டது. வெங்கடேசனின் உடலை மோப்பம்பிடித்த ஜெசி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது குறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story