கூட்டணி அரசு கவிழ்ந்தால் ஆட்சி அமைப்போம்; கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேட்டி


கூட்டணி அரசு கவிழ்ந்தால் ஆட்சி அமைப்போம்; கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 2 July 2019 2:07 AM IST (Updated: 2 July 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ்ந்தால் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. (விஜயநகர் தொகுதி) நேற்று ராஜினாமா செய்தார். இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரசை சேர்ந்த ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தது பற்றி எனக்கு தகவல் தெரியாது. அவர் கவர்னரை சந்திப்பது குறித்து ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இன்னும் 10, 12 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று சொல்கிறார்கள். இந்த கூட்டணி அரசை கவிழ்க்க நாங்கள் எக்காரணம் கொண்டும் முயற்சி செய்யமாட்டோம்.

எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்படி காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் 20 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் பதவியை ராஜினாமா செய்து, இந்த அரசு கவிழ்ந்தால், நாங்கள் ஆட்சி அமைக்க முயற்சி செய்வோம். நாங்கள் ஒன்றும் சன்னியாசிகள் அல்ல. இந்த அரசை கவிழ்ப்பது குறித்தும், எம்.எல்.ஏ.க்களை இழுப்பது குறித்தும் நான் பேச மாட்டேன், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் பார்க்கலாம் என்று முன்பு கூறினேன். இப்போதும் அதையே கூறுகிறேன். என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்கிறோம்.

இந்த அரசு கவிழ்ந்தால், மீண்டும் தேர்தலை சந்திக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. லிங்கனமக்கி அணையில் இருந்து பெங்களூருவுக்கு தண்ணீர் கொண்டுவர இந்த அரசு முடிவு செய்துள்ளது. இது அறிவியலுக்கு மாறான செயல். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதற்கு பதிலாக கால்வாய்களை சீரமைக்க வேண்டும். பிற வழிகள் மூலம் பெங்களூருவுக்கு தண்ணீரை கொண்டுவர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story