மருத்துவர்கள் தினத்தில் கருப்பு சட்டை அணிந்து பணியாற்றிய அரசு டாக்டர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்


மருத்துவர்கள் தினத்தில் கருப்பு சட்டை அணிந்து பணியாற்றிய அரசு டாக்டர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 July 2019 4:30 AM IST (Updated: 2 July 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவர்கள் தினத்தில் திருச்சியில் அரசு டாக்டர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியாற்றினர்.

திருச்சி,

உலகம் முழுவதும் நேற்று மருத்துவர்கள் தினம் கடை பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தமிழகத்தில் மருத்துவர்கள் தினத்தை கருப்பு தினமாக கடைபிடித்தனர். திருச்சியில் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியாற்றினர். சிலர் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். பெண் டாக்டர்கள் பலர் கருப்பு சேலையும், இளம் டாக்டர்கள் சிலர் கருப்பு நிற சுடிதார் அணிந்தும் பணியாற்றினர். இந்த சங்கத்தினருக்கு பிற டாக்டர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். இது குறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

பணியிட மாறுதல் கலந்தாய்வு

தமிழகத்தில் அரசு டாக்டர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். கலந்தாய்வு நடத்தப்படாமல் பணியிடங்கள் நிரப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் படுக்கை எண்ணிக்கை வசதிக்கு ஏற்ப டாக்டர்கள் நியமிக்கப்பட வேண்டும். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதனை நிறைவேற்ற அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்துள்ளோம். அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். போராட்டம் நடத்தினால் நோயாளிகளை பாதிக்கும் என்பதால் அரசுக்கு நூதன முறையில் எங்களது கோரிக்கையை எடுத்துரைக்கிறோம். திருச்சி மாவட்டத்தில் 200 அரசு டாக்டர்கள் கருப்பு சட்டை, கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். ஒரு சிலர் தொடர்ந்து கருப்பு சட்டை அணிந்து பணியாற்ற உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story