ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியம் இல்லை : சிவசேனா கருத்து


ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியம் இல்லை : சிவசேனா கருத்து
x
தினத்தந்தி 1 July 2019 11:45 PM GMT (Updated: 1 July 2019 9:45 PM GMT)

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லாதது என சிவசேனா கருத்து கூறி உள்ளது.

மும்பை, 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 19-ந் தேதி ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த விவாத கூட்டத்தில் பா.ஜனதாவின் கூட்டணியில் உள்ள சிவசேனாவில் இருந்து பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ஒரே ஒரு ஓட்டு மூலம் ஆட்சியை நிர்ணயிக்கவும் முடியும். ஆட்சியை கவிழ்க்கவும் முடியும். ஒரு மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த முடியாது. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இப்போதைக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியம் இல்லாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த திட்டம் குறித்து மக்களவை சிவசேனா தலைவர் விநாயக் ராவுத் கூறுகையில், “மத்திய, மாநில தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டால் அப்போது தேசிய பிரச்சினைகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். அது பிராந்திய கட்சிகளுக்கு பின்னடைவு ஆகும். இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசு அமைத்து உள்ள கமிட்டி முன் இந்த பிரச்சினைகள் குறித்து பேசுவோம்” என்றார்.

Next Story