ஊட்டியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு
விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர். அதன்படி ஊட்டி அருகே உள்ள கட்டபெட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடையை மூடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கட்டபெட்டு கிராமத்தை சுற்றி நடுஹட்டி, தொகலட்டி, பாரதிநகர், செல்வபுரம், எல்லக்கம்பை, ஒன்னோரை ஆகிய கிராமங்கள் உள்ளன. கட்டபெட்டுவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் குடியிருப்புகள் அருகே தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. மதுபிரியர்கள் அங்குள்ள காளியம்மன் கோவில் வாசலில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். மேலும் கட்டபெட்டு கிராமத்தை சுற்றி உள்ள பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையில் அந்த மதுக்கடை உள்ளது.
இதனால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. மதுக்கடைக்கு மது அருந்த வருபவர்கள் சிறுநீர் கழிப்பது, வாந்தி எடுப்பது, தகாத வார்த்தைகளை பேசுவது போன்றவற்றில் ஈடுபடுவதால் அப்பகுதியை கடந்து செல்ல பெண்களுக்கு சிரமமாக உள்ளது. அவர்கள் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை அருகே உள்ள விவசாய நிலம் மற்றும் தேயிலை தோட்டத்தில் வீசி செல்கின்றனர். குன்னூர்-கோத்தகிரி சாலை வளைவில் மதுக்கடை இருப்பதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனருகில் அரசு உயர்நிலைப்பள்ளியும் உள்ளது.
இதனால் அவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கட்டபெட்டுவில் உள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. மஞ்சூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், மஞ்சூர் அருகே சாம்ராஜ் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 2018-2019-ம் ஆண்டில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ-மாணவிகள் 140-க்கும் மேற்பட்டோர் கல்லூரி படிப்புக்கு சென்று விட்டனர். அவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட வில்லை. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டால், நடப்பு கல்வியாண்டில் படிப்பவர்களுக்கு மட்டும் விலையில்லா மடிக்கணினி வந்து உள்ளதாக தெரிவித்தார். எனவே எங்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story