போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதால், சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் - இந்து முன்னணி பிரமுகர் கைது


போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதால், சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் - இந்து முன்னணி பிரமுகர் கைது
x
தினத்தந்தி 1 July 2019 10:15 PM GMT (Updated: 1 July 2019 10:48 PM GMT)

போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதால், சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது:-

போத்தனூர்,

கோவையை அடுத்த போத்தனூர் கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). இந்து முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் இந்து முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சுரேஷ் விடுவிக்கப்பட்டார். இதனால் இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. இதனால் விரக்தியடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் கோணவாய்க்கால்பாளையம் பகுதியில் மதுகுடித்து விட்டு பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். இது குறித்த தகவலின் பேரில் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள், சுரேசை சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் சுரேஷ் அங்கிருந்து செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர், இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமாரை தகாத வார்த்தைகளால் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்தல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து அவரை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story