ரிஷிவந்தியம் அருகே, வாலிபரை கொலை செய்த 2 பேர் கைது - பரபரப்பு வாக்குமூலம்


ரிஷிவந்தியம் அருகே, வாலிபரை கொலை செய்த 2 பேர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 2 July 2019 4:15 AM IST (Updated: 2 July 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே வாலிபரை கத்தியால் குத்திக் கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே உள்ள பொற்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சரவணன்(வயது 31). இவர் நேற்று முன்தினம் மாலையில் ஏந்தல் வனப்பகுதியில் மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் அருகே காலி மதுபாட்டில்கள் கிடந்தது.

இதுகுறித்து பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அரியலூர் அருகே உள்ள அய்யனார்பாளையம் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மறித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் அரியலூர் பாரதிநகரை சேர்ந்த கதிர்வேல் மகன் விஜயகுமார்(27), பகண்டை கூட்டுரோடு பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(55) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஏந்தல் காப்புக்காட்டில் சரவணனை கத்தியால் குத்தி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமார், கோவிந்தசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

கைதான 2 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:-

விஜயகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு போதிய சம்பளம் கிடைக்காததால், மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் இவருக்கும் பகண்டை கூட்டுரோட்டில் ஜாதகம் பார்த்து வரும் கோவிந்தசாமி(55) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து மதுகுடித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் ஏந்தல் வனப்பகுதியில் உள்ள காட்டுப்பாதைக்கு சென்று மதுகுடித்தனர். போதை தலைக்கேறியதும், அவர்கள் இருவரும் அந்த பாதையிலேயே படுத்திருந்தனர். அப்போது சரவணன் மற்றும் அவருடைய நண்பர் ஜெகன்பிரபு, அதே காட்டுப்பகுதியில் மதுஅருந்துவதற்காக சென்றனர். அப்போது சாலையில் படுத்து கிடந்த விஜயகுமார் மற்றும் கோவிந்தசாமியிடம் ஏன் வழியில் படுத்திருக்கிறீர்கள் என்று சரவணன் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார், கோவிந்தசாமி ஆகிய இருவரும் சேர்ந்து சரவணனை கத்தியால் குத்தினர். உடனே ஜெகன்பிரபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் பலத்த காயமடைந்த சரவணன் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அப்பகுதியில் ஆட்களும் வர தொடங்கியதால், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story