பொள்ளாச்சி பாலியல் விவகாரம், திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.ஐ. விசாரணை - 5 பேர் மீதான காவல் நீட்டிப்பு


பொள்ளாச்சி பாலியல் விவகாரம், திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.ஐ. விசாரணை - 5 பேர் மீதான காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 2 July 2019 4:15 AM IST (Updated: 2 July 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக கைதான திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைதான 5 பேர் மீதான காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதீ‌‌ஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

எனவே இந்த வழக்கு தொடர்பாக திரட்டிய ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார், சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். உடனே அவர்கள், பொள்ளாச்சி, கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரின் வீடுகளில் ஏற்கனவே சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து, அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு தகவல்கள் சி.பி.ஐ. போலீசாருக்கு கிடைத்ததாக தெரிகிறது. இதற்கிடையில் இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறையில் இருந்த 5 பேரிடம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு 4 கார்களில் சி.பி.ஐ. போலீசார் திருநாவுக்கரசு வீட்டிற்கு வந்தனர். ஒரு பெண் அதிகாரி உள்பட 4 பேர், திருநாவுக்கரசின் தந்தை கனகராஜ் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் வீட்டில் ஏதாவது ஆவணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. இந்த விசாரணை 3 மணிநேரம் நடந்தது.

இந்த வழக்கில் சி.பி.ஐ. போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசப்பட்டது. இதற்கிடையில் திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.ஐ. போலீசார் மீண்டும் விசாரணை நடத்தியதால், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் பீதி அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திருநாவுக்கரசு, சதீ‌‌ஷ், சபரிராஜன், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் கைதாக 5 பேர் மீதான காவல் நேற்று நிறைவடைந்தது. எனவே சேலம் சிறையில் இருக்கும் அவர்களிடம் கோவை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) கண்ணன், காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார். அவர், வருகிற 15-ந் தேதி வரை 5 பேருக்கும் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

Next Story