ஆன்லைன் மூலம் சான்றிதழ் வழங்கும் சேவை அமைச்சர் ஷாஜகான் தொடங்கிவைத்தார்


ஆன்லைன் மூலம் சான்றிதழ் வழங்கும் சேவை அமைச்சர் ஷாஜகான் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 2 July 2019 5:01 AM IST (Updated: 2 July 2019 5:04 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மூலம் சான்றிதழ் வழங்கும் சேவையை அமைச்சர் ஷாஜகான் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் வழங்கப்படும் குடியிருப்பு, குடியுரிமை, சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் வழங்கிடும் சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான தொடக்கவிழா புதுவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

புதிய சேவையை அமைச்சர் ஷாஜகான் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., வருவாய்த்துறை செயலாளர் அசோக்குமார், புதுவை கலெக்டர் அருண், காரைக்கால் துணை கலெக்டர் ஆதர்ஷ், தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சேவையை தொடங்கிவைத்து அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது:-
வருவாய்த்துறை சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவித்தேன். இப்போது அது நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக உயர்கல்வி மாணவர் சேர்க்கை என்றாலே வருவாய்த்துறையின் சான்றிதழ்களுக்காக மாணவர்கள் அலைமோதுவார்கள்.

அவர்களது அலைச்சலை குறைப்பதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இனிமேல் சான்றிதழ் பெற நேரடியாக செல்ல வேண்டியதில்லை. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். வீட்டில் இருந்தபடியே வருவாய்த்துறையின் சேவைகளை பெறலாம். காகிதமில்லா சேவையை நடைமுறைப்படுத்த வேண்டு்ம் என்பதற்காக முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெறுபவர்கள் சென்டாக்கில் விண்ணப்பிக்கும்போது சான்றிதழில் உள்ள எண்ணை குறிப்பிட்டாலே போதும். அதை வருவாய்த்துறையுடன் தொடர்பு கொண்டு சரிபார்த்து கொள்வார்கள். அரசின் சேவைகள் டிஜிட்டல் மயமாகவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் கூறினார்.

இந்த புதிய சேவையை பெறhttp://edistrict.py.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பொதுசேவை மையங்களிலும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுசேவை மையம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு கட்டணமாக சான்றிதழ் ஒன்றுக்கு ரூ.25-ம், ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய பக்கம் ஒன்றுக்கு ரூ.2-ம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் தங்கள் கம்ப்யூட்டர், கைபேசி மூலமாகவும், மாணவர்கள் பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதற்கான குறுஞ்செய்தி விண்ணப்பதாரரின் கைபேசிக்கு வந்து சேரும்.

கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஆன்லைன் விண்ணப்பத்தை ஆய்வு செய்து ஒப்புகை அளித்தவுடன் சான்றிதழ்களை பொதுசேவை மையங்கள் அல்லது செல்போன் மூலமாக பொதுமக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதுவரை வழங்கப்பட்டு வந்த புதுப்பிக்கவல்ல ஒருங்கிணைந்த நிரந்தர சான்றிதழுக்கு பதிலாக மாணவர்கள் பள்ளிக்கூடங்கள் மூலம் விண்ணப்பித்து குடியிருப்பு, வருமானம், மற்றும் நிரந்தர சாதி சான்றிதழ்களை தனித்தனியே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இனி இச்சான்றிதழ்களுக்கு விண்ணப்பங்கள் நேரில் பெறப்படமாட்டாது என்று கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

Next Story