போர்வெல் போடும் பணியின்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பீறிட்டு வந்த தண்ணீர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது


போர்வெல் போடும் பணியின்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பீறிட்டு வந்த தண்ணீர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது
x
தினத்தந்தி 3 July 2019 3:00 AM IST (Updated: 2 July 2019 6:23 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே போர்வெல் போடும் பணியின்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பீறிட்டு தண்ணீர் வந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே போர்வெல் போடும் பணியின்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பீறிட்டு தண்ணீர் வந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பீறிட்டு வந்த தண்ணீர்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிறுக்கன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் தனது வீட்டில் ஆழ்துளை குழாய் (போர்வெல்) அமைக்க முடிவு செய்தார். அதன்படி ஆழ்துளை குழாய் அமைப்பதற்கு நீரோட்டம் இருக்கும் இடத்தை தேர்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிகள் தொடங்கியது.

சுமார் 5 அடி ஆழத்திற்கு போர்போட்டபோது திடீரென்று தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீறிட்டு வந்ததை அறிந்த போர்போடும் ஊழியர்கள் அங்கு இருந்து ஓடினார்கள். மேலும் தண்ணீர் பீறிட்டு வந்த காட்சியை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர். சிலர் இந்த வீடியோவை பார்த்து விட்டு அதிசய நீரூற்று என்று பதிவிட்டு உள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–

நெல்லையை அடுத்த பழவூர் பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்றில் உறை கிணறு அமைத்து சங்கரன்கோவில் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இந்த குடிநீரானது பெரிய குழாய்கள் மூலம் சிறுக்கன்குறிச்சி பம்பிங் ஸ்டே‌ஷன் வந்து மதவக்குறிச்சி, மானூர், அழகிய பாண்டியபுரம் வழியாக சங்கரன்கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இப்படி கொண்டு செல்லப்படும் தண்ணீர் மோட்டார் மூலம் உந்தப்படுவதால் அதிக அழுத்தத்துடன் செல்லும். இந்த தண்ணீர் செல்லும் குடிநீர் குழாயானது பொன்னுசாமி வீட்டில் போர்போடப்பட்ட இடத்தில் இருந்துள்ளது, அதை அறியாமல் அந்த குழாய் மீது போர்வெல் மி‌ஷன் துளையிட்டுள்ளது. இதனால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிக அளவில் நீர் வெளியேறி உள்ளது. அந்த உடைப்பை ஊழியர்கள் சரிசெய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story