போரூரில் ஏ.சி. எந்திரம் வெடித்து வீடு தீப்பிடித்தது கணவன்-மனைவி உடல் கருகினர்


போரூரில் ஏ.சி. எந்திரம் வெடித்து வீடு தீப்பிடித்தது கணவன்-மனைவி உடல் கருகினர்
x
தினத்தந்தி 3 July 2019 5:45 AM IST (Updated: 2 July 2019 10:06 PM IST)
t-max-icont-min-icon

சென்னை போரூரில் மின்கசிவு காரணமாக ஏ.சி. எந்திரம் வெடித்து தீப்பிடித்ததில் கணவனும், மனைவியும் தீயில் கருகினர்.

பூந்தமல்லி,

சென்னை போரூர், சக்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரகாஷ் மேனன் (வயது 55). வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிந்து மேனன் (45). இவர்களுக்கு கிரன்மேனன், ஆதித்யாமேனன் என 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் மகன்கள் தூங்கினர். ஹாலில் ஓடிக்கொண்டிருந்த ஏ.சி. எந்திரத்தை அணைக்காமல் மற்றொரு அறையில் பிரகாஷ் மேனன், அவரது மனைவி பிந்து மேனன் ஆகியோர் தூங்கச்சென்றனர்.

தொடர்ந்து ஏ.சி. ஓடிக்கொண்டு இருந்ததாலும், குறைந்த மின்அழுத்தம் காரணமாகவும் மின்கசிவு ஏற்பட்டு நேற்று அதிகாலை ஏ.சி. வெடித்து தீப்பிடித்தது. இதையடுத்து அதில் இருந்து கிளம்பிய புகை வீட்டிற்குள் பரவியது.

இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 பேரும் அறையில் இருந்து எழுந்து வெளியே வந்தனர். அப்போது ஹாலில் இருந்த சோபா, டி.வி. உள்ளிட்டவை தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். புகை அதிகமாக இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெளியே செல்ல முடியாமல் பால்கனிக்கு வந்து சத்தம் போட்டனர்.

இதையடுத்து 2 மகன்களும் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. அப்போது கணவன், மனைவி இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் ரோந்து பணியில் இருந்த போரூர் போலீசார் விரைந்து வந்து பால்கனி வழியாக 4 பேரையும் உயிருடன் மீட்டனர்.

மேலும் தீக்காயம் அடைந்த பிரகாஷ் மேனன், பிந்து மேனன் ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விருகம்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து போரூர் இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் நீண்ட நேரம் ஏ.சி. எந்திரம் ஓடிக்கொண்டு இருந்ததாலும், இரவு நேரங்களில் குறைந்த மின்அழுத்தம் கொண்ட மின்சாரம் வந்ததாலும் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக கடந்த மாதம் இதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் தீப்பிடித்து எரிந்தது. தற்போது மீண்டும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏ.சி.யில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தம்பதி தீயில் கருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தாம்பரம் அருகே ‘பிரிட்ஜ்’ வெடித்து 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Next Story