விருதுநகரில் விபத்து அரசு பஸ் மீது கார் மோதல், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி - டிரைவர் படுகாயம்


விருதுநகரில் விபத்து அரசு பஸ் மீது கார் மோதல், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி - டிரைவர் படுகாயம்
x
தினத்தந்தி 3 July 2019 4:00 AM IST (Updated: 3 July 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி, மருமகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் டிரைவர் படுகாயம் அடைந்தார். இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

விருதுநகர்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜல்லிப்பட்டியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் (வயது 82). அவருடைய மனைவி கமலம் (70). இவர்களுடைய மருமகன் சேகர் (52). இவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

சுப்பிரமணியனின் மருத்துவ சிகிச்சைக்காக இவர்கள் திருவனந்தபுரம் செல்வதற்காக ஒரு காரில் வந்தனர். அந்த காரை அய்யப்பன் (53) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை 4 மணி அளவில் அந்த கார், விருதுநகர் நான்கு வழிச்சாலையில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனை அருகே வந்து கொண்டிருந்தது. காரின் முன்னால் நாகர்கோவிலுக்கு செல்லும் அரசு விரைவு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சின் பின் பகுதியில் கார் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த சுப்பிரமணியன், அவருடைய மனைவி கமலம், மருமகன் சேகர் ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

கார் டிரைவர் அய்யப்பன் படுகாயம் அடைந்தார். அரசு பஸ்சை நாகர்கோவிலை சேர்ந்த விஜயன் (52) என்பவர் ஓட்டிவந்தார். அரசு பஸ்சில் 4 பயணிகள் மட்டுமே இருந்தனர். எனவே பஸ் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாண்டியன் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த டிரைவர் அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் விருதுநகர்-மதுரை நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story