குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்


குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 July 2019 4:15 AM IST (Updated: 3 July 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் காலிக்குடங்களுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

பருவமழை சரிவர பெய்யாததாலும், காவிரி நீர் கிடைக்காததாலும் திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, குளம் மற்றும் நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தவறிய தமிழக அரசையும் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் செல்லமணி, நாகராஜன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மன்னார்குடி ஒன்றியக்குழு சார்பில் காலிக்குடங்களுடன் கும்மியடித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாலாபாண்டியன், ஒன்றிய செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய துணை செயலாளர் ராகவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், நாகேஷ், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரவள்ளி, இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன், மாணவர் மன்ற ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெண்கள் காலிக்குடங்களை வைத்து கும்மியடித்து மத்திய மாநில, அரசுகள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டு மக்களை இன்று தண்ணீர் பஞ்சத்தில் தவிக்க விட்டதாக கூறி கும்மியடித்தனர்.

மன்னார்குடி நகராட்சி சார்பில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் ரத்தினகுமார், நகர துணை செயலாளர் தனிக்கொடி, நிர்வாகிகள் பார்த்திபன், மீனாம்பிகை கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். நகராட்சியின் அனைத்து வார்டில் உள்ள கழிவுநீர் வடிகால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி குளத்திற்கு வடிகால் வசதிகள் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் உலகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரராமன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் சுந்தர், விவசாய தொழிலாளர் சங்க நகர தலைவர் பக்கிரிசாமி, நகர செயலாளர் வாசுதேவன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் குருமணி, நகர செயலாளர் வீரரஷ்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொரடாச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கேசவராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, துணைச்செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தங்கையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயராமன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பரந்தாமன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக தஞ்சை சாலை பகுதியில் இருந்து ஆர்ப்பாட்டக்குழுவினர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story