நீர்வீழ்ச்சியில் குளித்தபடி எல்லை மீறினர், பொது இடத்தில் சில்மிஷம்; காதல் ஜோடிக்கு தர்ம அடி
சிரிமனேவில், நீர்வீழ்ச்சியில் குளித்தபடி எல்லை மீறி பொது இடத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியை பிடித்து அப்பகுதி வியாபாரிகளும், சுற்றுலா பயணிகளும் தர்ம அடி கொடுத்தனர்.
பெங்களூரு,
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா சிரிமனேவில் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதனால் அங்கு ஏராளமான கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் அங்கு கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த நீர்வீழ்ச்சி பகுதிக்கு ஒரு இளம் காதல் ஜோடி வந்தது. பின்னர் அந்த காதல் ஜோடி நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தது. ஒரு கட்டத்தில் காதலனும், காதலியும் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களுடைய நெருக்கம் ஆபாச கட்டத்தை எட்டியது. எல்லை மீறி அவர்கள் இருவரும் நெருக்கமாகி சில்மிஷத்திலும், ஆபாச செயலிலும் ஈடுபட்டனர். இதைப்பார்த்த அப்பகுதி வியாபாரிகளும், சுற்றுலா பயணிகளும் முகம் சுழித்தனர். காதல் ஜோடியின் எல்லை மீறிய செயலால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வியாபாரிகளும், சுற்றுலா பயணிகளும் அந்த காதல் ஜோடியை பிடித்தனர். பின்னர் அவர்கள் அந்த காதலனுக்கு தர்ம–அடி கொடுத்தனர். மேலும் அந்த இளம்பெண்ணையும் பிடித்து கடுமையாக எச்சரித்து லேசாக தாக்கினர்.
பின்னர் அந்த காதல் ஜோடிக்கு அறிவுரையும் வழங்கினர். அதையடுத்து அந்த வாலிபரை தனியாகவும், அந்த இளம்பெண்ணை தனியாகவும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பொது இடத்தில் ஆபாச சில்மிஷத்தில் ஈடுபட்ட காதல் ஜோடி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து சிருங்கேரி புறநகர் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம் காதல் ஜோடி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு ஏதும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.