கடும் கோடையிலும் கை கொடுக்கும் அணைப்பாடி கிராம பொதுக்கிணறு


கடும் கோடையிலும் கை கொடுக்கும் அணைப்பாடி கிராம பொதுக்கிணறு
x
தினத்தந்தி 3 July 2019 4:15 AM IST (Updated: 3 July 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

கடும் கோடையிலும் அணைப்பாடி கிராமத்தில் உள்ள பொதுக்கிணறு ஒன்று பொதுமக்களுக்கு கைக்கொடுத்து தண்ணீரை வழங்கி வருகிறது.

குன்னம்,

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினைகள் அதிகமாக நிலவுகிறது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் பகுதியில் பெரும்பாலான ஏரிகள், பொதுக்கிணறுகள் நீரின்றி வறண்டு போய் கிடக்கின்றன. இந்த வறட்சியிலும் தற்போது வரை அணைப்பாடி கிராம மக்களுக்கு பொதுக்கிணறு ஒன்று குடிநீரை வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள அணைப்பாடி கிராமத்தில் கடந்த 2016-ல் ஊரில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அணைப்பாடி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து ரூ.9 லட்சம் செலவில் பெரிய ஏரி, குடிநீர் ஏரி என உள்ள 2 ஏரிகளை முறையாக ஆழப்படுத்தி, 9 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரத்துவாய்க்கால்களை சீர் செய்து, படிக்கட்டுக்களை புதுப்பித்து, கரைகளையும் பலப்படுத்தினர்.

அதோடு 2017-ல் நிலவிய கடும் வறட்சியுன்போது ஊர் பொதுமக்கள், அணைப்பாடி இளைஞர்கள் மற்றும் புதிய பயண நண்பர்கள் இணைந்து குடிநீர் ஏரியில் அமைக்கப்பட்டு இருந்த கிணற்றை தூர்வாரினர். தூர்வாரிய அடுத்த நாளே தண்ணீர் ஊறியதால் அதனை மக்கள் பயன்படுத்த தொடங்கினர். அதோடு ஊரில் குடிநீர் குழாய்களில் வீணாகும் நீரையும் ஏரிக்குள் கொண்டு சேர்க்கும் பணியினையும் செய்தனர். இந்த ஏரியில் நாள் ஒன்றுக்கு ஏராளமான கால்நடைகள் நீர் அருந்துகின்றன.

இந்த ஏரிகளுக்கு நீரைக் கொண்டு வரும் வரத்துவாய்க்கால்களை வருடாவருடம் ஊர்ப்பொதுமக்களே சீரமைத்து வருகின்றனர். இந்த வருடமும் கோடையில் இந்த வரத்துவாய்க்கால்களை சீர்செய்து வான் மழைக்காக காத்திருக்கின்றனர். குடிநீருக்கு தீர்வு என்பது இருக்கின்ற நீர்நிலைகளையும், நீர்வழித்தடங்களையும் மீட்டெடுத்து பெய்யும் மழை நீரை முறையாகச் சேமித்து பயன்படுத்த வேண்டும் என்பதே. அணைபாடி கிராமம் போல் அரசை நம்பாமல் தங்களே சொந்த முயற்சி எடுத்து நீரை சேமித்தால் குடிநீருக்கு பஞ்சம் இருக்காது என்பது திண்ணம்.

Next Story