பழனியில், ஆதார் மையம் செயல்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்
பழனி நகராட்சி பழைய அலுவலக கட்டிடத்தில் ஆதார் மையம் செயல்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பழனி,
பழனி தாலுகா அலுவலக வளாகம் மற்றும் நகராட்சி பழைய அலுவலக கட்டிடத்தில் ஆதார் மையங்கள் செயல்பட்டு வந்தன. இங்கு பழனி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புதிய ஆதார் மற்றும் ஆதார் அட்டையில் திருத்தங்களை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் இணையதள சேவை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மையம் செயல்படவில்லை. எனவே பொதுமக்கள் நகராட்சி பழைய அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ஆதார் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு ஆதார் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் நகராட்சி பழைய அலுவலக கட்டிடத்தில் செயல்படும் ஆதார் மைய பணியாளருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆதார் மைய பணியாளர் 10 நாட்களாக பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆதார் மையம் செயல்படாமல் இருந்தது. ஆதார் கார்டில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக வந்த பொதுமக்கள், மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து ஆதார் மையம் செயல்படாமல் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் நகராட்சி பழைய அலுவலக கட்டிடம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பழனி டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பழனியில் பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story