ஸ்ரீமுஷ்ணம் அருகே, காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
ஸ்ரீமுஷ்ணம் அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், குடிநீருக்கான மின்மோட்டாரை இயக்கி குளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இது பற்றி அறிந்ததும் கிராம மக்கள், அந்த வாலிபரை தட்டிக்கேட்டனர். அதற்கு அந்த வாலிபர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விஷம் கலந்து அனைவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும், டேங்க் ஆபரேட்டர் முருகராஜாவைவும், அந்த வாலிபர் தாக்கினார். மின்மோட்டாருக்கு செல்லக்கூடிய ஒயர்களையும் அந்த வாலிபர் அறுத்து வீசினார்.
இதனால் கடந்த 4 நாட்களாக அந்த மின்மோட்டாரை இயக்காததால், கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கமுடியவில்லை. குடிநீரை தேடி கிராம மக்கள் விளைநிலங்களுக்கு சென்று வருகிறார்கள்.
அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் கிராம மக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலையில் காலி குடங்களுடன் சேத்தியாத்தோப்பு-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாலையின் குறுக்கே கட்டைகளை போட்டு, கோஷமிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன, ஸ்ரீமுஷ்ணம் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், குடிநீர் வழங்கக்கோரியும், மின் மோட்டார் ஒயரை சேதப்படுத்திய வாலிபரை கைது செய்யவும் வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் வாலிபர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், குடிநீர் வழங்குவதாகவும் கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கக்கோரி, காலி குடங்களுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் கே.எஸ்.செல்வராஜ், வட்ட பொருளாளர் ஜெயராமன், மாவட்ட குழு ராஜாராமன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story