மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 July 2019 10:15 PM GMT (Updated: 2 July 2019 11:35 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி,

மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளின் பாதிப்புக்கு ஏற்றவாறு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தசை சிதைவு மற்றும் முதுகு தண்டுவட விபத்தால் கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது. நடப்பதில் சிரமம் உள்ள 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ரோலேட்டர் என்ற சாதனம் வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட 2 கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர், 18 வயதில் இருந்து 45 வயதுக்குள் உள்ள காது கேளாத வாய்பேசாத, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் கடுமையான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் தாய்மார்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்கப்படுகிறது.

செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் மற்றும் பணிபுரியும், சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன காதொலி கருவி வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களில் பயனடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் அளிக்கலாம்.

இதற்கு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் போது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ரே‌‌ஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்வி பயிலும் அல்லது பணி புரியும் அல்லது சுயதொழில் செய்வதற்கான சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பிக்க வருகிற 12-ந்தேதி கடைசி நாள். எனவே, மாவட்டத்தில் உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story