கம்பத்தில், ரேஷன் பொருட்கள் ஏற்றி வந்த லாரி குடிநீர் கேட்வால்வு தொட்டியில் சிக்கியது - சாலையில் தண்ணீர் வீணாக பெருக்கெடுத்து ஓடியதால் பரபரப்பு
கம்பத்தில் ரேஷன்கடைக்கு பொருட்கள் ஏற்றி வந்த லாரி குடிநீர் கேட்வால்வு தொட்டியில் சிக்கி கொண்டது. இதில் கேட்வால்வு உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக பெருக்கெடுத்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம்,
உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையான்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 37). இவர் உத்தமபாளையத்தில் உள்ள நுகர்வோர் பொருள் வாணிப கிட்டங்கியில் இருந்து அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு உத்தமபாளையம் தாலுகாவிற்குட்பட்ட ரேஷன் கடைக்கு கொண்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று மதியம் நுகர்வோர் பொருள் வாணிப கிட்டங்கியில் இருந்து அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கம்பம் காமாட்சி கவுடர் நகரில் உள்ள ரேஷன் கடை எண் 2-க்கு கொண்டு சென்றார்.
அப்போது ரேஷன் கடைக்கு செல்லும் வழியில் சாலையில் உள்ள குடிநீர் கேட்வால்வு தொட்டியில் லாரியின் பின்புற டயர் ஏறியது. இதில் எடை தாங்காமல் சிமெண்டு சிலாப் உடைந்ததால் லாரியின் டயர் தொட்டியில் சிக்கிக் கொண்டது.
இதனால் கேட்வால்வு உடைந்து தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து வீணாக ஓடியது. மேலும் லாரி ஒருபுறம் சாய்ந்ததால் அதில் இருந்த அரிசி, சீனி மூட்டைகள் தண்ணீரில் விழுந்து வீணாகக்கூடிய சூழ்நிலை எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உத்தமபாளையம் வட்டவழங்கல் துறைக்கும், நகராட்சி குடிநீர் வழங்கல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையொட்டி நகராட்சி அதிகாரிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் கொடுத்து குடிநீர் தொட்டிக்கு செல்லக்கூடிய தண்ணீரை நிறுத்தினர். ஆனால் லாரியில் உள்ள ரேஷன் பொருட்களை லாரியில் இருந்து இறக்காமல் ரேஷன் கடை ஊழியர்கள் வட்டவழங்கல் துறை அதிகாரிகள் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் வெகு நேரமாகியும் வரவில்லை. இந்நிலையில் திடீரென மழை பெய்தது. இதனால் மழையால் ரேஷன் பொருட்கள் வீணாக கூடாது என்பதற்காக அப்பகுதி இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து ரேஷன் பொருட்களை டிராக்டரில் ஏற்றி சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் சேர்த்தனர். இளைஞர்களின் சேவைப்பணியை பொதுமக்கள் பாராட்டினார்கள். பின்னர் குடிநீர் கேட் வால்வு தொட்டியில் சிக்கிக் கொண்ட லாரி மீட்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story