பலத்த புழுதிக்காற்று, தூத்துக்குடி விமானம் மதுரையில் தரை இறங்கியது
தூத்துக்குடி விமான நிலைய பகுதியில் வீசிய பலத்த புழுதிக்காற்று காரணமாக தூத்துக்குடியில் தரையிறங்க வேண்டிய விமானம், அங்கிருந்து வந்து மதுரையில் தரையிறங்கியது.
மதுரை,
சென்னையில் இருந்து 59 பயணிகளுடன் தனியார் விமானம் ஒன்று நேற்று காலை தூத்துக்குடிக்கு புறப்பட்டது. அந்த விமானம் தூத்துக்குடி விமான நிலைய பகுதிக்கு பகல் 12.10 மணி அளவில் வந்தது. அந்த விமானத்தை விமானி தரையிறக்க முயன்றார். அப்போது, விமான நிலைய பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புழுதிக்காற்று வீசியது.
இதனால் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையை சரிவர விமானியால் பார்க்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் தரை இறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்தபடி பறந்து கொண்டு இருந்தது.
தொடர்ந்து புழுதிக்காற்று வீசிக் கொண்டே இருந்ததால், விமானத்தை தரை இறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் விமானத்தை மதுரைக்கு கொண்டு செல்லுமாறு விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. அதே நேரத்தில் இந்த விமானம் மதுரை விமான நிலையத்தில் தரை இறங்க சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி பகல் 12.50 மணிக்கு அந்த விமானம், மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கினர். அப்போது பயணிகள் சிலர் தங்களை அதே விமானத்தில் தூத்துக்குடிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் சிறப்பு பஸ்கள் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அந்த விமானம் பயணிகள் யாரும் இல்லாமல் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
அதே வேளையில் இந்த விமானத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல தயாராக இருந்த 66 பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்பட்டன.
Related Tags :
Next Story