வானவில் : இந்திய சந்தைக்கு வரும் சீன மோட்டார் சைக்கிள்


வானவில் : இந்திய சந்தைக்கு வரும் சீன மோட்டார் சைக்கிள்
x
தினத்தந்தி 3 July 2019 2:22 PM IST (Updated: 3 July 2019 2:22 PM IST)
t-max-icont-min-icon

இதுவரை சீன தயாரிப்புகளில் சிறுவர்களின் விளையாட்டு பொருட்களில் தொடங்கி வீட்டு உபயோகப் பொருட்கள் பலவும் இந்திய வீடுகளை அலங்கரித்தன.

துவரை சீன தயாரிப்புகளில் சிறுவர்களின் விளையாட்டு பொருட்களில் தொடங்கி வீட்டு உபயோகப் பொருட்கள் பலவும் இந்திய வீடுகளை அலங்கரித்தன. குறைந்த விலையில் பொருட்கள் வாங்க வேண்டுமானால் அவை சீன தயாரிப்புகளாக மட்டுமே விளங்குகின்றன. வித்தியாசமான அதேசமயம் முன்னேறிய தொழில்நுட்பம் கொண்ட பொருட்கள் பெரும்பாலும் சீன தயாரிப்புகளே. இதுவரையில் இந்திய சந்தையில் சீன தயாரிப்பு ஸ்மார்ட்போன்களே அதிகம். இப்போது சாலைகளையும் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது சீன நிறுவனங்கள். ஏற்கனவே சீனாவைச் சேர்ந்த எஸ்.ஏ.ஐ.சி. நிறுவனம் கார் தயாரிப்பு தொழிற்சாலையை இங்கு அமைத்து உற்பத்தியை தொடங்கி உள்ளது.

தற்போது மோட்டார் சைக்கிளும் வர உள்ளன. சி.எப். மோட்டோ என்ற சீன நிறுவனம் தனது பிரீமியம் ரக மோட்டார் சைக்கிளை இம்மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. முதல் கட்டமாக இந்நிறுவனம் நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இவை அனைத்துமே பிரீமியம் மாடல்களாகும்.

இதற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த ஏ.எம்.டபிள்யூ. என்ற நிறுவனத்துடன் சி.எப். மோட்டோ ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி பெங்களூருவில் ஏ.எம்.டபிள்யூ. தொழிற்சாலையில் சி.எப். மோட்டோ நிறுவன மோட்டார் சைக்கிள்கள் அசெம்பிள் செய்யப்படும். 250 என்.கே., 400 என்.கே., 650 எம்.டி. மற்றும் 650 என்.கே. என நான்கு மாடல்கள் அறிமுகமாகிறது.

ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த 300 என்.கே. மாடலுக்குப் பதிலாக 250 என்.கே. மாடல் மோட்டார் சைக்கிள் இங்கு அறிமுகமாகும். சீனாவைச் சேர்ந்த சி.எப். மோட்டோ நிறுவனம் 1989-ம் ஆண்டு உருவானது. இந்நிறுவனம் 2017-ம் ஆண்டு வரை ஆஸ்திரியாவைச் சேர்ந்த கே.டி.எம். நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு மோட்டார் சைக்கிள்களைத் தயாரித்து வந்தது. முதல் கட்டமாக இந்த மோட்டார் சைக்கிள்களை ஐதராபாத், பெங்களூரு, புனே, கோவா, மும்பை, கொச்சி ஆகிய நகரங்களிலும் அதைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களில் டி.எப்.டி. எல்.சி.டி. தொடு திரை, அலாய் சக்கரங்கள், தனித் தனி இருக்கைகள், எல்.இ.டி. முகப்பு விளக்கு உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன. மொத்தம் நான்கு வேரியன்ட்கள் அறிமுகமாக உள்ளது. இவை அனைத்துமே ஏற்கனவே சந்தையில் உள்ள ஹோண்டா சி.பி.ஆர்300, கே.டி.எம்250 டியூக், பஜாஜ் டொமினார், கவாஸகி வெர்சிஸ் 650, பெனலி டி.ஆர்.கே 502 உள்ளிட்ட மோட்டார் சைக்கிளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. இவற்றின் விலை ரூ.2 லட்சத்தில் தொடங்கி ரூ.6 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.

Next Story