குழந்தைகளின் எண்ண ஓட்டத்தை புரிந்து பாடம் கற்பிக்க வேண்டும் ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை
குழந்தைகளின் எண்ண ஓட்டத்தை புரிந்து ஆசிரியர்கள் அவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
திருவண்ணாமலை,
பள்ளியில் பயிலும் குழந்தைகளை அரவணைத்து, அன்பை செலுத்தி அவர்களுக்கு கல்வியை போதிக்கும் விதமாக ‘விடலைப் பருவக் குழந்தை நேயம்’ எனும் திட்டம் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சமூக கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் வரவேற்றார். விடலைப் பருவக் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், பள்ளியின் பொறுப்புகள் குறித்தும் சமூக கல்வி இயக்குனர் தேவநேயன் பேசினார். அதைத்தொடர்ந்து விடலைப் பருவக் குழந்தை நேயப் பள்ளிகளிள் அறிமுகம் குறித்தும், திட்டமிடல் குறித்தும் ஷியாம்சுந்தர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் குழந்தை நேயப் பள்ளிகளாக மாற வேண்டும். குழந்தைகளை நேசித்து அவர்களை குழந்தைகளாக பாவித்து, குழந்தைகளின் குடும்ப பின்னணிகளை ஆசிரியர்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளின் எண்ண ஓட்டத்தினைப் புரிந்து பாடம் கற்பித்தல் வேண்டும். இதுகுறித்து நீங்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அன்பின் மூலம் அளிக்கப்படும் கல்வி சிறந்த, தரமான கல்வியாக இருக்கும். அன்பு, பரிவு, இரக்கம் ஆகியவைக்கு ஒரு போதும் கடுமையான தண்டனைகள் ஈடாகாது. மாணவர்களின் உளவியல், உடல் ரீதியான தண்டனைகள் அவர்களுக்கு பயன் தராது. கல்வி அறிவு என்பதற்கு பதிலாக கல்வி அன்பு என்ற நிலை உருவாக வேண்டும்.
தாய் மொழியில் குழந்தைகள் மொழிப்புலமை பெற வேண்டும். மொழி சார்ந்த தெளிவு வேண்டும். குழந்தைகளிடம் பெற்றோர்களுக்கு இணக்கம் இருக்க வேண்டும். குழந்தைகளை சிறந்த ஆளுமைத் திறன் மிக்க குடிமகனாக மாற்றும் வகையில் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி தெரிவித்தார்.
Related Tags :
Next Story