வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் வேலைவாய்ப்பு அலுவலர் தகவல்


வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் வேலைவாய்ப்பு அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 3 July 2019 10:00 PM GMT (Updated: 3 July 2019 5:21 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை நேரடியாக மனுதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன் பெற விரும்புகிறவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தினமும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாது.

ஆனால் தொலைதூரக் கல்வி அல்லது தபால் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெறலாம்.

இதற்கு வங்கி கணக்கு புத்தக நகல், சுய உறுதிமொழி ஆவணம் ஆகியவற்றை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

மேலும் எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் அனைத்து கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் உதவித்்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story