கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை தரமான சாலை அமைக்க கோரிக்கை
தரமான சாலை அமைக்க வலியுறுத்தி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் காலனி பகுதியில் இருந்து மெயின் ரோடு வரையிலும், தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பழுதடைந்த சாலையை அகற்றி விட்டு, அதில் ஜல்லி கற்களை பரப்பும் பணி நேற்று நடந்தது.
அப்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவான அகலத்துக்கு ஜல்லி கற்களை பரப்பி தரமற்ற சாலை அமைப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவு அகலத்தில் தரமான சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள், யூனியன் ஆணையாளர் கிரியிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்று கொண்ட அவர், இதுகுறித்து யூனியன் என்ஜினீயர் மூலம் சாலையை நேரில் ஆய்வு செய்வதாகவும், அங்கு தரமான சாலை அமைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story