திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தள்ளுவண்டி, தரைக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தள்ளுவண்டி, தரைக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 4 July 2019 4:30 AM IST (Updated: 3 July 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தள்ளுவண்டி மற்றும் தரைக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருச்சி,

திருச்சி மாநகரை ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்தின்கீழ அழகுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. திருச்சி சத்திரம் டவுன் பஸ் நிலையத்தை நவீனப்படுத்தும் வகையில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு தரைக்கடைகள், தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், என்.எஸ்.பி. சாலையில் உள்ள தரைக்கடைகள் என போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகிறது.

மேலும் கடைகளின் முன்பு போடப்பட்டிருந்த சன் சைடுகளும், தடுப்பு சுவர்கள், படிக்கட்டுகள் உள்ளிட்டவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இந்தநிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் இடத்தில் பலர் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டிகள் வைத்து பழ வகைகள், உணவு, மின்சாதன பொருட்கள், பொம்மைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்தனர்.

இதனால், மத்திய பஸ் நிலையம் வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் இடையூறாக இருந்தது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. தள்ளுவண்டி, தரைக்கடைக்காரர்களிடம் ஊழியர்கள் சிலர் மாமூல் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. எனவே, அவற்றை அகற்ற மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி, நேற்று மத்திய பஸ் நிலையத்தில் டவுன் பஸ் நிற்கக்கூடிய இடத்தில் தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். மேலும் அங்கு திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் ஆகியோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தள்ளுவண்டி, தரைக்கடைகளை அகற்றுவதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அதிகாரிகள் தரப்பில், விதிகளை மீறி கடைகள் வைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு இந்த கடைகள் இடையூறாக இருப்பதால் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் எடுத்து கூறப்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். சிலர், தாங்களாகவே முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.
1 More update

Next Story