87 அரசு பள்ளிக்கூடங்களுக்கு செட்-டாப் பாக்ஸ் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் 87 அரசு பள்ளிக்கூடங்களுக்கு செட்-டாப் பாக்சை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
தூத்துக்குடி,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒளிபரப்பப்பட உள்ள டி.வி.யை பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் பார்ப்பதற்கு வசதியாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கூடங்களுக்கு செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 87 அரசு பள்ளிக்கூடங்களுக்கு செட்-டாப் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் செட்-டாப் பாக்சை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளின் கற்கும் ஆற்றலை மேம்படுத்தவும், தகவல்களை எளிதில் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 24 மணி நேரம் செயல்படும் கல்வி தொலைக்காட்சி என்ற புதிய சேனல் தொடங்கப்பட உள்ளது. இதில் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் செட்-டாப் பாக்ஸ்கள் வழங்கும் பணிகள் நடக்கிறது. இன்னும் ஒருவார காலத்துக்குள் இதற்கான இணைப்புகள் வழங்கப்பட்டு, அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதனை முறையாக பயன்படுத்தி மாணவ-மாணவிகள் சிறப்பான கல்வி பெற ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் வசந்தா (தூத்துக்குடி), நாராயணசாமி (திருச்செந்தூர்), மாரியப்பன் (கோவில்பட்டி), உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன், கேபிள் டி.வி. தாசில்தார் சிவக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story