அருவங்காடு தொழிற்சாலையில் வெடி விபத்து, படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
அருவங்காடு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ராணுவ ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தினமும் ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். கடந்த மாதம் 29-ந் தேதி நள்ளிரவு 12.45 மணியளவில் வழக்கம்போல் தொழிற்சாலையில் வெடிமருந்து தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள கார்டைட் பிரிவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்கள் சூரஜ்குமார்(வயது 28), பிரபு ராபின், சற்குண முரளி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 7.20 மணிக்கு சிகிச்சை பலனின்றி சூரஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையின் பொது மேலாளர் பி.கே.சிங் தலைமையில் உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். சூரஜ்குமாரின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பின்னர் அவரது சொந்த ஊரான பீகார் மாநிலம் பாட்னாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
Related Tags :
Next Story