நந்தட்டி-பள்ளிப்பாடி இடையே ஆற்று வாய்க்காலை தூர்வாரும் பணி மும்முரம்
நந்தட்டி-பள்ளிப்பாடி இடையே ஆற்று வாய்க்காலை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பருவமழை பெய்வது வழக்கம். இதனால் நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். பலத்த மழை காலங்களில் வீடுகள், விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது. இதனால் பருவமழை பெய்வதற்கு முன்பாக ஆற்று வாய்க்கால்களை முறையாக தூர்வாரி அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையொட்டி கூடலூர் அருகே நந்தட்டி- பள்ளிப்பாடி இடையே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்லும் ஆற்று வாய்க்காலை பொக்லைன் எந்திரம் உதவியுடன் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.4½ லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. பலத்த மழை பெய்தாலும் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடாதவாறு, வாய்க்கால் ஆழப்படுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதனிடையே கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் தூர்வாரும் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் பலத்த மழை பெய்யும் சமயத்தில் ஆற்று வாய்க்கால்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி ஊருக்குள் வந்து விடுகிறது. இதனால் முக்கிய இடங்களில் செல்லும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். கூடலூர் பகுதியில் பருவமழை பெய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
இதை ஏற்று அதிகாரிகள் நந்தட்டி-பள்ளிப்பாடி இடையே ஆற்று வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இப்பணி நிறைவு அடைந்த உடன் ஆங்காங்கே சிறிய தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர், விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story