ரேஷன் அரிசி வினியோகம் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும்; வெளிச்சந்தைக்கு கடத்தல் அதிகரிப்பு


ரேஷன் அரிசி வினியோகம் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும்; வெளிச்சந்தைக்கு கடத்தல் அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 July 2019 4:30 AM IST (Updated: 4 July 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி வெளிச்சந்தைக்கு கடத்துவது அதிகரித்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் ரேஷன் அரிசி வினியோகத்தை முறையாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதும், பதுக்கி வைக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூடைகளை கைப்பற்றி சிவில் சப்ளை கிட்டங்கியில் ஒப்படைத்துள்ளனர்.

இவர்களின் கவனத்துக்கு வராமல் பல பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்படுவதும், வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் மாவட்டம் முழுவதும் ரேஷன்அரிசி வினியோகம் வழங்கல் துறை அதிகாரிகளால் முறையாக கண்காணிக்கப்படவில்லை என புகார் கூறப்படுகிறது. பல்வேறு காரணங்களால் ரேஷன் அரிசி வெளிச்சந்தைக்கு கடத்தப்படுவது கண்டுக்கொள்ளாமல் விடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் ரேஷன் அரிசி கடத்தல் மட்டும் பதுக்கலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் ரேஷன் அரிசி வினியோகத்தை முறையாக கண்காணிக்கவும், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வழங்கல் துறை அதிகாரிகளுக்கும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story