சிவகாசி பெரியகுளம் கண்மாய் தூர்வாரும் பணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்


சிவகாசி பெரியகுளம் கண்மாய் தூர்வாரும் பணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 July 2019 3:45 AM IST (Updated: 4 July 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பெரியகுளம் கண்மாய் தூர்வாரும் பணியை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்தார்.

சிவகாசி,

சிவகாசி பெரியகுளம் கண்மாய் மற்றும் சிறுகுளம் கண்மாய் வறண்டு காணப்படுகிறது. இதில் பெரியகுளம் கண்மாயின் நீர்வரத்து பாதைகளில் ஆக்கிரமிப்பால் கண்மாய்க்கு தண்ணீர் வருவது தடைப்பட்டது. இந்த நிலையில் பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் பாதைகளில் உள்ள அடைப்புகளை சரி செய்யவும், கண்மாயை தூர்வாரவும் சிவகாசி பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி சிவகாசியில் உள்ள லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம், ஜேசீஸ் சங்கம், பட்டாசு, தீப்பெட்டி, அச்சக உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் பசுமை மன்றம் என்ற புதிய அமைப்பை தொடங்கி பெரியகுளம் கண்மாயை தூர்வார முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து கண்மாயை தூர்வார மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டு நேற்று பணி தொடங்கியது. இதில் கலெக்டர் சிவஞானம், ஆர்.டி.ஓ. தினகரன், தாசில்தார் வானதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் தொழில் அதிபர்கள் ஏ.பி.செல்வராஜன். ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன், சோனி கணேசன், கற்பகா ஜெய்சங்கர், நாகராஜன் வர்த்தக சங்க நிர்வாகிகள் ரவி, ஜவகர், சத்தியமூர்த்தி, எழுத்தாளர் திலகபாமா, முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் சிவஞானம் கொடியசைத்து தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனை கருதியும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும். மழைகளில் கிடைக்கும் தண்ணீரை கண்மாய்களில் சேகரிக்க வேண்டும். இந்த நிலையில் சிவகாசியில் தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பெரியகுளம் கண்மாயை நாங்கள் தூர்வாருகிறோம் என்று அனுமதி கேட்டனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கண்மாய்களை தூர்வார யார் முன் வந்தாலும் அவர்களுக்கு உரிய அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story