ஆரணியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு மர்ம நபருக்கு வலைவீச்சு


ஆரணியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 July 2019 10:15 PM GMT (Updated: 3 July 2019 7:03 PM GMT)

ஆரணியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆரணி, 

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் பகுதியை சேர்ந்தவர் ஆர்.கே.ஜி.ஜெயராமன் (வயது 63). இவர், ஆரணி-ராட்டினமங்கலம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி ஜெயராமன் வீட்டில் இருந்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தை பையில் வைத்து கொண்டு சென்றுள்ளார். அதில் ரூ.20 ஆயிரத்தை ஆரணி தச்சூர் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தனது கணக்கில் போட்டுள்ளார்.

பின்னர் மீதியுள்ள ரூ.2 லட்சத்தை பையில் வைத்து மோட்டார் சைக்கிளில் சீட்டுக்கு அடியில் வைத்துள்ளார். இதனையடுத்து ஜெயராமன் அருகே உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பணப்பையை திருடிக் கொண்டு ஓடினார்.

இதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் பணப்பையை திருடிச் சென்ற மர்ம நபரை விரட்டி சென்றுள்ளனர். ஆனால் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக ஜெயராமன் ஆரணி நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story