குடிநீர் பிரச்சினை: ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குடிநீர் பிரச்சினை தொடர்பாக அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாயை சிலர் துண்டித்து அதன்மூலம் குடிநீர் பிடித்தனர். இதனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் செல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் நேற்று காலை அய்யம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாயை துண்டித்து சிலர் குடிநீர் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் எழிலரசன், உதவி செயற்பொறியாளர் பத்மநாபன் ஆகியோர் விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் செய்தனர்.
அப்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட காரணமாக உள்ள தனிப்பட்ட நபர்களின் குழாய் இணைப்பை துண்டித்தும், ஆழ்துளை கிணறு அருகிலேயே சிறுமின்விசை நீர்த்தேக்க தொட்டி அமைத்து கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என்றும், நீர்வளம் உள்ள பகுதியில் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் பொதுமக்கள், குடிநீர் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் எழிலரசனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிலையில் பள்ளத்தெரு பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் தனது வீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வினியோகம் செய்து வருகிறார்.
இதனால் அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினை ஓரளவு தீர்ந்துள்ளது. வெங்கடேசனின் இச்செயலை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story