சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி வெட்டிக்கொலை; கண்மாயில் பிணம் வீச்சு


சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி வெட்டிக்கொலை; கண்மாயில் பிணம் வீச்சு
x
தினத்தந்தி 4 July 2019 4:15 AM IST (Updated: 4 July 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளியை வெட்டிக் கொன்று பிணத்தை கண்மாயில் வீசிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி உறிஞ்சுகுளம் கண்மாயில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் மிதப்பதை அப்பகுதி மக்கள் கவனித்தனர். இதுகுறித்து அவர்கள் சிவகாசி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், உறிஞ்சுகுளம் கண்மாய் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

கழுத்து உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபரின் பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். எனவே அந்த நபர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அந்த நபர் யார்? என்பதை அறிய போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அவர் முதலிப்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பதும், அவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் செந்தில்குமார் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவில் மனைவி லட்சுமியிடம் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் செந்தில்குமார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைக்கு என்ன காரணம், கொலையாளிகள் யார்? என தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை கொன்று கண்மாயில் வீசிச் சென்ற நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story