சேலம் மார்க்கெட்டுகளில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்தது


சேலம் மார்க்கெட்டுகளில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்தது
x
தினத்தந்தி 4 July 2019 3:15 AM IST (Updated: 4 July 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மார்க்கெட்டுகளில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்தது.

சேலம், 

சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் சந்தைகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகளை ஏராளமான விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றன. இதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

இதனிடையே கடும் வறட்சியின் காரணமாக நீர்நிலைகள் வறண்டுள்ளதால் விவசாய பொருட்கள் உற்பத்தி குறைந்துள்ளன. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளன. இதையொட்டி காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது.

மார்க்கெட்டுகளில் முட்டை கோஸ், இஞ்சி, கேரட், பீட்ரூட், கீரைகள் மற்றும் பல்வேறு காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன. அதாவது, வழக்கமாக ரூ.20-க்கு விற்பனையாகும் முட்டை கோஸ் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த வாரம் ரூ.35-க்கு விற்பனையானது. தற்போது மேலும் விலை உயர்ந்து ரூ.40-க்கு விற்பனையானது.

ஒரு கிலோ ரூ.60-க்கு விற்ற கேரட், ரூ.75-க்கும், ரூ.54-க்கு விற்ற பாகற்காய் ரூ.70-க்கும், ரூ.50-க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.60-க்கும், ரூ.25-க்கு விற்ற புடலங்காய் ரூ.30-க்கும், மல்லி கட்டு ரூ.50-க்கும், கறிவேப்பிலை ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ.40 வரைக்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், சின்னவெங்காயம் ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க் கும், பீன்ஸ் ரூ.50-க்கும் விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளன. ஆனால் இனி வரும் நாட்களில் முகூர்த்த நாட்கள் உள்ளதால் மேலும் காய்கறிகள் விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.

Next Story