குடிமராமத்து திட்டப்பணிகள் விழிப்புணர்வு குழு கூட்டம்; கலெக்டர் தலைமையில் நடந்தது


குடிமராமத்து திட்டப்பணிகள் விழிப்புணர்வு குழு கூட்டம்; கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 4 July 2019 3:45 AM IST (Updated: 4 July 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் குடிமராமத்து திட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கண்மாய் புனரமைப்பு பணிகள் குறித்து விவசாயிகளுடனான விழிப்புணர்வு குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள நீராதாரங்களை பாதுகாத்து நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கிலும், எதிர் வரும் பருவமழை காலத்தில் மழைநீரை அதிக அளவில் சேமிக்கும் நோக்கிலும் குடி மராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதார அமைப்பு) மூலம் ரூ.37 கோடியே 59 லட்சத்தில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், மடைகள் சீரமைத்தல் மற்றும் மறுகட்டுமானம் செய்தல், வரத்துக்கால்வாய்களை புனரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக கீழ்வைகை வடிநில கோட்டம் பரமக்குடியின் கட்டுப்பாட்டில் பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களில் உள்ள 41 கண்மாய்களை சீரமைக்க ரூ.23 கோடியே 62 லட்சமும், குண்டாறு வடிநில கோட்டம் மதுரையின் கட்டுப்பாட்டில் முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி வட்டங்களில் உள்ள 28 கண்மாய்களை சீரமைக்க ரூ.13 கோடியே 97 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு அரசின் பங்களிப்பாக 90 சதவீத தொகையும், அப்பகுதி விவசாய குழுக்களின் பங்களிப்பாக 10 சதவீத தொகையுடன் இப்பணிகள் பதிவு பெற்ற விவசாய சங்கங்கள் மூலம் நியமன முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் தரமான முறையில் வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ளப்படும். இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கடலாடி தாலுகாவுக்கு உட்பட்ட கோட்டையேந்தல், செல்வனூர் மற்றும் பெரியகுளம் ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட கலெக்டர் நேரடியாக சென்று கண்மாய்களை ஆய்வு செய்ததுடன் குடிமராமத்து திட்டப்பணிகள் குறித்து கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கிடகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ராமநாதபுரம் சுமன், பரமக்குடி ராமன் மற்றும் 69 கண்மாய்களை சார்ந்த ஆயக்கட்டுதார விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story