காவல்துறை வாகனங்களில் தமிழில் எழுத போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


காவல்துறை வாகனங்களில் தமிழில் எழுத போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 4 July 2019 3:30 AM IST (Updated: 4 July 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

காவல்துறை வாகனங்களில் தமிழில் காவல் என்று எழுத வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்,

தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தலைமையில் வக்கீல்கள் குழுவினர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ் ஆட்சி மொழியின் சட்டப்படியும், தமிழ்வளர்ச்சித்துறை அரசாணைப்படியும் அரசு அலுவலகங்கள், வாகனங்கள், கோப்புகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் அனைத்து பெயர் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை வாகனங்களில் காவல் என்பதற்கு பதிலாக போலீஸ் என்றே அனைத்திலும் எழுதப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன.

ஆனால் தமிழகத்தில் அரசாணையையும், நீதிமன்ற உத்தரவினையும் புறக்கணித்து ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக சட்டத்தை மதித்து காப்பாற்ற வேண்டிய காவல்துறை வாகனங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. எனவே காவல்துறை வாகனங்களில் காவல் என்றும் தமிழில் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Next Story